இறை படைப்பின் அபூர்வம்
மதிய உணவு இடைவேளையில் பசுமையும் அழகும் நிறைந்த பள்ளி ஒன்றில் நுழைந்தேன். வரிசையாக அமர வைக்கப்பட்டு குழந்தைகளுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த நேரம் அது. எனக்காக காத்திருந்தது போல் " நல்லாருக்கியா நீ" என்ற குரல் கேட்க, யாரது என்று கால்களுக்கு ஓய்வு கொடுத்து நின்றேன். என் சேலையை பிடித்தவாறு மீண்டும் "நல்லாருக்கியா நீ" என்ற குழந்தையின் அருகில் அமர்ந்து, தலையைத் தடவி "நான் நல்லாருக்கேன், நீங்க எப்டி இருக்கீங்க" என்று நான் கேட்டதும், அந்த குழந்தையின் முகத்தில் நான் கண்ட மகிழ்ச்சி வார்த்தைகளில் இங்கு வடிக்க இயலாது என்றாலும் கூட, அந்த நேரம் மீண்டும் தாய்மை பேற்றை அடைந்துவிட்ட ஆனந்தம் என்னுள்ளே. ஆனந்தத்தை இன்னும் கொஞ்சம் வாங்கிக்கொள் என்பது போல், " நீ சாப்டல இல்ல ஆ சொல்லு ஊட்டி விடுறேன்" என்று ஊட்டும் சோறு சிந்தாமல் இருக்க என் தாடை பிடித்து அவள் ஊட்டிய நான்கு பருக்கைகள் நிறைந்த அந்த சோறு அமிர்தமாய் தித்தித்தது என் நாவினில். அமிர்தம் உண்டதில்லை அந்த பாக்கியம் கிடைதது விட்டதாய் உணர்ந்தேன் அந்த நொடி.
ஆயிரங்கள் சம்பாதித்த போதிலும் அவள் அன்பிற்கு கடன்காரியாய் அவளிடமே சில பருக்களை கடன் வாங்கி அவளுக்கு ஊட்டினேன். பின் உங்கள் பெயர் என்ன ? எந்த வகுப்பு படிக்கிறிங்க என்ற என் கேள்விக்கு பதிலாய், வேண்டுமென்ற அளவுக்கு வாரிக் கொள் என்பது போல் புன்னகையை பதிலாய் தந்து விட்டு, பின் கள்ளமில்லா உள்ளத்திலிருந்து தெளிவற்ற வார்த்தைகளில் கூறினாள் "தக்ஷா மூனாம் வகுப்பு" என்று. மீண்டும் அவளைத் தழுவி அணைத்து விட்டு, "தக்ஷா சாப்பிடுங்க மிஸ் வரேன்னு" சொல்லிவிட்டு என
பணிகளுக்கு கடந்து விட்டேன் தலைமை ஆசிரியர் அறை நோக்கி.
என் பணிகளை முடிக்க தக்ஷாவும் உண்டு முடித்திருந்தாள். குழந்தைகளோடு நிழற்படம் எடுத்துக் கொள்வதும், அதை மீண்டும் மீண்டும் பார்த்து என்னை உற்சாகப் படுத்திக் கொள்வதும் எனக்கு ஆத்ம சந்தோஷம் தரும் செயல் என்பதால், தக்ஷா வை அழைத்து, " மிஸ் தக்ஷா கூட போட்டோ எடுத்துக்கவா " என்று கேட்டதுதான் நேரம். என் வார்த்தைகள் முடியும் முன்னே ஓடி வந்து என் கழுத்தை இறுக்கி அணைத்த தக்ஷாவின் உடை முழுவதும் நனைந்திருந்தது. அவள் வாயும் சாட்டையும் அரசுப் பள்ளியின் முட்டை வாசத்தை மட்டுமல்ல சில முட்டைத் துகள்களையும் நிரப்பி வைத்திருந்தது. யாருக்குத்தான் பிடிக்காது இவ்வளவு பாசமான தக்ஷா வை என்று நினைத்துக் கொண்டேன். முகம் சுளிக்க வைக்கும் முட்டை வாசம் என் நாசிகளில் நுழையவில்லை. மாறாக தக்ஷாவின் பாசத்தின் வாசம் என்னிலும் நிரம்பியது.
ஆசையோடு நிழற்படம் எடுத்துக் கொண்ட எனக்கு ஆடித் தள்ளுபடிக்கு ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போல், தக்ஷா ஒன்றல்ல எனக்கு இரண்டு இலவசங்களை பரிசளித்தாள். அன்பாய் என்னை கட்டி அணைத்து கண்ணங்களில் முத்தம் கொடுத்தாள். எத்தனை பெரும் பாக்கியம் செய்தவள் நான் என்று சற்று கர்வம் கொண்டேன் அந்த கணநேரம்.
பிரிய மனமில்லாமல் தக்ஷாவின் பார்வைக்கு மட்டுமே விடை தந்து, "தக்ஷா மிஸ் உங்கள பார்க்க நாளைக்கு வரேன்னு" சொல்ல, " நீ நாளைக்கு மறக்காம வா" என்று தக்ஷா கையசைத்து என்னை வழியனுப்பி வைத்தாள்.
தக்ஷாவின் பார்வைகளில் மட்டுமே விடை பெற்றுக் கொண்டேனே தவிர இன்னும் தக்ஷாவின் முகம் மட்டுமே என் கண்களிலும் மனதிலும் நிழலாடிக் கொண்டிருக்கிறது. தக்ஷா சிறப்புக் குழந்தை என்று தலைமை ஆசிரியர் என்னிடம் கூறியது நினைவுக்கு வரவே, உண்மையில் இவள் சிறப்புக் குழந்தை தான் பள்ளிக்கு மட்டுமல்ல எனக்கும். மீண்டும் அவள் குரல் கேட்க, அவள் ஊட்டும் சில பருக்கைகளுக்காக.... நான்.....
சிறப்பு குழந்தைகள் (மாற்றுத்திறனாளி)
இறைவனின் படைப்பில்
குறை நிறை என்றில்லையே
கோபம் பொய்
பொறாமை வஞ்சம்
மிகுந்த மானுட சமூகத்தில்
கள்ளம் கபடம் ஏதுமின்றி
பாச நேசம் நிறைத்து
எல்லோரையும் சொந்தமென்று
புன்னகையால்
உறவாடிக் கொள்ளும்
அபூர்வ படைப்பு இவர்கள்
விளையாட்டாய்
விதி வரைந்து விட்ட
ஓவியங்கள் அல்ல இவர்கள்
ஆழக்கிடந்து
பெருமை சொல்லும்
விலையேறப் பெற்ற
முத்துக்கள் இவர்கள்
அள்ளிஅணைத்து
ஆராதிக்க வேண்டிய
அழகு தேவதைகளும்
ராஜாக்களும் இவர்கள்
மனம் அடர்த்தியாய் மாறி
கனக்கின்ற இதயத்தையும்
இலவம் பஞ்சென
இலகுவாக்கும்
மருத்துவம் கற்ற
மருத்துவர்கள் இவர்கள்
பொன்னும் பொருளும்
சேர்க்க விரும்பாத
புண்ணிய படைப்பு இவர்கள்
பணத்திற்கும் பதவிக்கும்
ஆசை இல்லா
அன்பு நிறைந்த
படைப்பு இவர்கள்
போட்டிக்கும்
பொறாமைக்கும்
விலக்களித்து
பெருந்தன்மையால்
அலங்கரித்துக் கொள்ளும்
அழகு இவர்கள்
இந்தப் பிள்ளைகளின்
உலகத்தை ஒருமுறையேனும்
தரிசித்துப் பாருங்கள்
மனம் சொல்லும்
வேறொரு சொர்க்கம்
வேண்டாமே என்று........
*நானும் என் தக்ஷாவும்*
Comments
Post a Comment