இறை படைப்பின் அபூர்வம்
மதிய உணவு இடைவேளையில் பசுமையும் அழகும் நிறைந்த பள்ளி ஒன்றில் நுழைந்தேன். வரிசையாக அமர வைக்கப்பட்டு குழந்தைகளுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த நேரம் அது. எனக்காக காத்திருந்தது போல் " நல்லாருக்கியா நீ" என்ற குரல் கேட்க, யாரது என்று கால்களுக்கு ஓய்வு கொடுத்து நின்றேன். என் சேலையை பிடித்தவாறு மீண்டும் "நல்லாருக்கியா நீ" என்ற குழந்தையின் அருகில் அமர்ந்து, தலையைத் தடவி "நான் நல்லாருக்கேன், நீங்க எப்டி இருக்கீங்க" என்று நான் கேட்டதும், அந்த குழந்தையின் முகத்தில் நான் கண்ட மகிழ்ச்சி வார்த்தைகளில் இங்கு வடிக்க இயலாது என்றாலும் கூட, அந்த நேரம் மீண்டும் தாய்மை பேற்றை அடைந்துவிட்ட ஆனந்தம் என்னுள்ளே. ஆனந்தத்தை இன்னும் கொஞ்சம் வாங்கிக்கொள் என்பது போல், " நீ சாப்டல இல்ல ஆ சொல்லு ஊட்டி விடுறேன்" என்று ஊட்டும் சோறு சிந்தாமல் இருக்க என் தாடை பிடித்து அவள் ஊட்டிய நான்கு பருக்கைகள் நிறைந்த அந்த சோறு அமிர்தமாய் தித்தித்தது என் நாவினில். அமிர்தம் உண்டதில்லை அந்த பாக்கியம் கிடைதது விட்டதாய் உணர்ந்தேன் அந்த நொடி. ஆயிரங்கள் சம்பாதித...