பேருந்து அனுபவம்
தினம் கடக்கும் பேருந்து பயணத்தில் இன்று நான் கடந்து வந்த ஒரு நிகழ்வு. மதுரையில் இருந்து திண்டுக்கல் வரும் பேருந்தில், பேருந்து நிலையத்திற்கு முன்பாகவே ஒரு நிறுத்தத்தில் இறங்கி அடுத்த பேருந்தைப் பிடிக்க வேண்டும் என்பதால் வேகமாக இறங்கி, ஓட்டமும் நடையுமாகச் சென்று, திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கிச் செல்லும் அரசு பேருந்தில் பின் வாசல் படியில் நான் ஏறிய பொழுது, ஒரு குரல் என் காதில் ஒலித்தது. "அந்த இருக்கையில் அமர வேண்டாம்; அதில் நான் இடம் போட்டு இருக்கிறேன்" என்பதுதான் அந்த குரல். "சரிங்க அம்மா" என்று சொல்லிவிட்டு வேறு ஒரு இருக்கையில் நான் அமர்ந்தேன். மீண்டும் அடுத்தடுத்த பேருந்து நிறுத்தங்களில் ஏறுபவர்களிடமும் அதையே சொல்லிவிட்டு, அந்த அம்மாவும் அவரது கணவருமாக சேர்ந்து இரு வயதானவர்கள் வருவார்கள் அவர்களால் வெகு தூரம் நிற்க முடியாது என்பதால் தான் சொல்கிறோம் என்றார்கள். அதைக் கேட்ட நான் சற்று மனம் நெகிழ்ந்தேன். பரவாயில்லை வயதானவர்களையும் அவர்களின் உடல் நிலையையும் பற்றிச் சிந்திக்கும் அளவிற்கு மனித மனங்கள் இங்கு பரந்து கிடக்கின்றன என்று உள்ளூர மகிழ்ந்தேன். எல்லோரும் இப்படி நினைத்து விட்டால் முதியோர் இல்லங்கள் கூட விரைவில் குறைந்து விடும் என்று எண்ணிய எனக்கு அந்த நினைப்பு முடிவதற்குள், அடுத்த பேருந்து நிறுத்தத்தில் அவர்கள் எதிர்பார்த்த அந்த இரு வயதானவர்களும் ஏறினார்கள். அந்தக் கணவனும் மனைவியும் அவர்களுக்கு அந்த இருக்கையை அடையாளம் காட்டிய போது இருவருமாக அங்கு அமர்ந்தார்கள். பின் அந்த பெண் இருந்த மூன்று பேர் இருக்கையில் வேறு இரு பெண்கள் அமர, பின் இருக்கையில் அந்த வயதான இருவருடன் அமர்ந்து கொண்டார் அவரது கணவர். அந்த இருக்கை எனக்கு நேர் எதிராக உள்ள இருக்கை. அவர்கள் அமர்ந்த பின்தான் தெரிந்தது அந்த ஆண்மகனின் தாயும் தந்தையும் அவர்கள் என்பது. சில நிமிடங்கள் கூட பேருந்து செல்லவில்லை. அப்பாவிற்கும் மகனுக்கும் அப்படி ஒரு வாக்குவாதம் தொடங்கியது. இருவரும் வார்த்தைகளால் ஒருவரையொருவர் மாறி மாறி வசை பாடிக் கொண்டார்கள. அவர்கள் பரிமாறிக் கொண்ட வார்த்தைகளில் கோபத்தின் ஆதிக்கம் அளவு கடந்து இருந்தது. இவர்களது பேச்சு அந்த பேருந்தில் இருந்த அனைவரையும் சற்று முகம் சுளிக்க வைத்தது. அந்தத் தந்தை மகன் இருவருமே அந்த இருக்கையில் அமரவில்லை. சொத்து பத்துக்களை, வரவு செலவுகளை கணக்குப் பார்க்கும் குடும்பங்களையும் தாண்டி பயணச்சீட்டுகளுக்கு கணக்கு வழக்கு பார்த்து ஒருவர் பேருந்தை விட்டு இறங்கும் நிலைக்கு தயாராகி விட்டார். ஆனால் அந்த இரு பெண்களும் தங்களது கணவன்மார்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டனர். அவர்கள் இருவரும் அதை காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. இருக்கையை விட்டு எழுந்து ஒருவரும் பின்புறம் ஒருவரும் முன்புறமும் சென்றாலும் வாக்குவாதம் மட்டும் தொடர்ந்தது.
பெற்றவர்களின் அன்பு கிடைக்காத நிலையில் அனாதை இல்லங்களில் அன்புக்காக ஆதரவுக்காக ஏங்கி நிற்கும் பிள்ளைகளும், பிள்ளைகளின் அன்பு கிடைக்காத நிலையில் முதியோர் இல்லத்தில் தவிக்கும் அந்த வயதானவர்களும் என் கண் முன்னே அந்த நேரம் தோன்ற, இந்த வாக்குவாதம் என் மனதை ரணமாக்கியது.
திருமண வாழ்வின் பந்தமாக அர்த்தமாக பிள்ளை வரங்களை பார்க்கிறது இந்த உலகம் என்பது நிதர்சனம். இந்தப் பிள்ளையை பெற்றெடுக்க எத்தனை வரம் இருந்திருப்பார்கள் இந்த பெற்றோர்கள்? கருவறை கடந்து தோள் மீதும் மார் மீதும் சுமந்து, விரும்பியது அத்தனையும் வாங்கித் தந்து தங்கள் விருப்பங்களை குறைத்துக் கொண்டு பிள்ளையின் விருப்பங்களையும் நிறைவேற்றி வளர்த்த பிள்ளைகள் தான் இவர்கள். படிப்பு, வேலை, திருமணம் என்று தன் மகனின் வளர்ச்சிக் கண்டு ஒவ்வொரு நிலையிலும் பூரித்து நின்ற பெற்றோர்கள், ஏன் இந்த பிள்ளைக்காக சிறு வார்த்தைகளை கூட விட்டுக் கொடுக்க முடியாதநிலை? தவறு பிள்ளையுடையது என்றாலும் அமைதியாக அதை கடந்து விட்டு தான் வளர்த்த பிள்ளை தானே என்று, வார்த்தைகளின் வன்மத்தைத் தராமல் இருந்திருக்கலாமே. பெற்றோர்களின் வார்த்தை பிள்ளைகளுக்கு சாபங்களாக மாறிவிடக் கூடாதல்லவா? வாழ்க்கை முழுவதையும் பிள்ளைக்காக தியாகம் செய்யும் பெற்றோர்கள் வார்த்தைகளை தியாகம் செய்யாதது ஏனோ? ஒரு கணம் இப்படி நான் சிந்தித்தாலும் மறுகணம் என் சிந்தனை ஓட்டத்திற்குள் மகனின் செயல் அலையாடியது.
இந்த பூமியில் நம் வரவை ஆராதித்து, நமக்கென்று ஒரு முகவரியையும் தந்து, நடை பயிலும் முன் தூக்கிச் சுமந்து, பின் மெல்ல விரல் பிடித்து நடை பயில கற்றுத்தந்து, சொந்தக் காலில் சுயமாக சம்பாதித்து வாழ வழிகாட்டியப் பெற்றோரை வார்த்தைகளைக் கொண்டு காயப்படுத்தும் அளவிற்கு பிள்ளையின் மனம் ஏன் இப்படி இருக்கிறது? ஒரு சூழ்நிலையில் தன் மாமியார் மாமனாருக்காக பரிந்து பேசிய தன் மனைவியையும் கூட இந்த மகன் கடிந்து கொண்டு, இனி அத்தை மாமா என்று இவர்களை என் முன் சொல்லக் கூடாது என்று கூறியது என் நெஞ்சத்தை உலுக்கியது போன்ற ஓர் உணர்வு .இவரது நெஞ்சம் என்ன கல்லா என்று கூட எண்ணத் தோன்றியது. தவறு தந்தையுடையதாகவே இருக்கட்டும் அவர் என் தந்தை அல்லவா என்று முப்பது வயதைக் கடந்திருக்கும் இந்த மகனுக்கு ஏன் தோன்றவில்லை?
எத்தனை பேருக்கு கிடைக்கும் தன்னை தோள் மீது சுமந்த தன் தந்தையை ஒரு குழந்தையாக தன் தோளில் சாய்த்துக் கொள்ளும் வாய்ப்பு. இது வாய்ப்பல்லவே வரம் தானே. பெற்றவர்களின் உணர்வையும் பெற்றவர்களின் அன்பையும் இந்த ஆண்மகன் புரிந்து கொள்ள எந்தக் கல்வியும் கற்றுத் தரவில்லையா?
கணினியின் மொழியும் கைபேசியின் மொழியும் புரிந்து கொண்ட இந்த மகனுக்கு தந்தையின் மொழி புரியவில்லையா? இதை எந்தக் கல்வி கற்றுத் தரும்? மதிப்பெண்களை நோக்கி ஓட வைக்கும் கல்விச்சூழல் மனித மனங்களை படிக்கக் கற்றுத் தராதா?
மனிதர்களைப் படிக்கும் கல்வியையும், வாழ்வியல் விழுமியங்களை கற்றுக் கொடுக்கும் கல்வியையும், நல்ல மனப்பான்மைகளை வளர்க்கும் மதிப்புக் கல்வியையும் வேண்டுகிறேன்..
Comments
Post a Comment