நாட்டைக் காக்கும் நல்லுயிர்கள் - வாசிப்பு அனுபவம்
*நாட்டைக் காக்கும் நல்லுயிர்கள்*
✍️நாட்டைக் காக்கும் நல்லுயிர்கள் என்ற புத்தகத்தை சில தினங்களுக்கு முன் வாசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்தப் புத்தகத்தை வாசிப்பதை ஒரு வாய்ப்பாக பார்த்த எனக்கு வாசித்த பின் தான் இது எனக்குக் கிடைத்த வரம் என்று புரிந்தது.
✍️வருடத்தின் 365 நாட்களில், சுதந்திர தினம், குடியரசு தினம், ராணுவ தினம் என்று சில தினங்கள் மட்டுமே நாட்டையும் நாட்டைக் காக்கும் ஒப்பற்ற பணியை செய்து வரும் ராணுவ வீரர்களையும், எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களையும், அவர்களின் தியாகச் செயல்களையும் நினைத்து வீரவணக்கம் செய்துவிட்டு கடந்து விடுகிறோம். இந்த புத்தக வாசிப்பு ராணுவ வீரர்கள் சில தினங்கள் மட்டும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் அல்ல தினந்தோறும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்று உள்ளுணர்வை என்னுள் ஏற்படுத்தியது.
✍️சின்ன சின்ன வலிகளையும் தாங்க இயலாது, உறவுகளுக்குள் கூட விட்டுக் கொடுக்க மனம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் சில மனிதர்களுக்கு மத்தியில், பல ஆண்டுகளாகப் பெற்றோரைப் பிரிந்து, மனைவியைப் பிரிந்து, தினம் தினம் தூக்கிக் கொஞ்சும் பிள்ளைச் செல்வங்களைப் பிரிந்து மீண்டும் எப்போது வீடு திரும்புவோம், எப்படி திரும்புவோம் என்ற எந்தவித உத்திரவாதமும் இல்லாத நிலையில் தன் குடும்பத்தை விட தான் நேசிக்கும் நாடும் தன் நாட்டு மக்களும் தான் தனக்கு முக்கியம் என்று தங்கள் வாழ்வையே தியாகம் செய்து வாழ்கின்ற ராணுவ வீரர்களின் தியாகங்களை வாசித்த போது நெஞ்சம் சற்று நேரம் நின்று துடித்தது. இந்த அன்புச் சகோதரர்களின் பாதுகாப்பு நம்மோடு இருப்பதால்தான் நாட்டிற்குள் நிம்மதியாக நாமெல்லாம் வாழ்கின்றோம் என்பதை முழுவதுமாக உணர முடிந்ததோடு, நான் என்ன என் நாட்டிற்கு செய்யப் போகின்றேன் என்ற கேள்வியும் என்னுள் எழுந்தது.
✍️கொளுத்தும் வெயில், கடும் குளிர், உதிரத்தை உறையச் செய்யும் பனி, பசி, தூக்கம் இவைகள் எல்லாவற்றையும் சமமாக பார்க்கும் அளவிற்கு இவர்கள் மனம் பக்குவப்பட்டதால் தானோ என்னவோ இந்த இடர்கள் எதுவும், இவர்கள் தேசத்தின் மீது கொண்ட பற்றை விடவும் பெரிதான விடயமாக இவர்கள் எண்ணியதில்லை என்பது ஒவ்வொருவரின் வீர வரலாற்றையும் படிக்கும்போது உணர்ந்து கொண்டேன்.
✍️உலகையே உலுக்கிப் பார்க்கச் செய்ததுதான் கார்கில் போர் என்பது நம் அனைவரும் அறிந்ததே. கார்கில் போரை நினைத்தால் இன்னமும் கூட நெஞ்சம் பதப்பதைக்கத்தான் செய்கிறது. இந்தப் போரில் மலைமுகட்டின் உச்சியில் நின்று எதிரிகளோடு நேரடியாக சண்டையிட்டு வீரர்களை வீழ்த்தி வீர மரணம் அடைந்த மேஜர் சரவணன் அவர்கள் தான் கார்கில் போரில் உயிரிழந்த முதல் ராணுவ அதிகாரி. தன் பின் வரும் வீரர்களுக்கு சிறந்த முன்மாதிரியாக வீரத்தோடு படை நடத்தியவர் மேஜர் சரவணன்.
✍️எதிரிகள் எத்தனை பலம் வாய்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை. எனக்கு என் உயிரை விட என் நாடு தான் முக்கியம். அதனால் ஒரு இன்ச் கூட பின் வாங்க மாட்டேன் என்று வீரத்தோடு போர்க்களம் இறங்கி போரிட்டு வீர மரணம் அடைந்த மேஜர் சோம்நாத் சர்பாவின் வீரத்தை இந்த உலகம் மறக்குமா என்ன? தன்னோடு களம் இறங்கிய வீரர்கள் அனைவரும் உயிரிழக்கவே சற்றும் தளர்ந்து விடாது மூன்று முறையும் தனி ஒருவராக போர்க்களம் கண்ட கதாநாயகன் நாயக் ஜாடுநாத் சிங்கிற்கு பரம் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது பெருமை அளிக்கிறது.
✍️நவீன ரக பேட்டன் டேங்குகளைக் கொண்டு சண்டையிட்ட பாகிஸ்தான் வீரர்களுடன் சாதாரண ஆர். சி. எல். துப்பாக்கிகளைக் கொண்டே போரிட்டு எதிரிகளை வீழ்த்திய அப்துல் ஹமீதின் வீரமிக்க செயலையும், துணிச்சலையும் இன்றைய தலைமுறை நிச்சயமாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
லெப்டினட் அருண் கேப்டன் பால் ராணுவ பணியில் சேர்ந்து 5 மாதங்களிலே இந்தியா பாகிஸ்தான் போரில் எதிரிகளின் ஏழு பீரங்கிகளை சிதறச் செய்து தன் இன்னுயிரை கொடுத்தபோது அவருக்கு வயது 21 என்ற வரியை வாசித்த போது என் கண்கள் கண்ணீரை அந்த இளைஞனுக்கு காணிக்கையாக்கியது. வாழ்வையே அர்ப்பணித்த இந்த இளைஞன் உலகம் உள்ளளவும் போற்றப்பட வேண்டியவர்.
இந்திய - சீனப் போரில் தொடர்ந்து 72 மணி நேரங்களாகப் போராடி தன் உயிரை நாட்டிற்காகத் தந்த ஜஸ்வந்த் சிங் இறந்தபோது அவருக்கும் வயது 21 தான். தனி ஒருவராய் தாயகத்துக்காக தன்னைத் தந்த இவருக்கு மகாவீர் சக்ரா விருது வழங்கப்பட்டது இவரது வீர வரலாற்றுக்கு நாடு தந்த சரியான அங்கீகாரம் . 22 வயதில் தன் வீரச் செயலால் உயிர் நீத்த கேப்டன் விஜயந் தப்பாரின் வீர வரலாறு வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய நிகழ்வு. ஒரு கிலோமீட்டர் நடப்பது என்றாலே நாம் பல நேரங்களில் சலித்துக் கொள்கிறோம்.
✍️18000 அடி உயர மலை உச்சியில் அதுவும் 80 டிகிரி செங்குத்தான மலை உச்சியில் சற்றும் பயமில்லாமல் ஆபத்தான பனிமலையில் தைரியமாக முன்னேறிச் சென்று எதிரிகளை வீழ்த்தி "Chorbat La" என்ற இடத்தை மீட்டெடுத்தார் மேஜர் சோனம் வாங்சுக். இதுதான் கார்கிலின் முதல் வெற்றி என்று வாசித்தபோது மேஜர் சோனம் வாஞ்சுக்கின் நாட்டுப்பற்றில் என் உதிரம் உருகி நின்றது.
✍️ராணுவம் என்றால் அதில் ஆண்கள் மட்டும் தான் என்ற என் சிந்தனையை கேப்டன் ராஜஸ்ரீ மாற்றினார். தன் கணவர் மேஜர் விவேக் குப்தா போரில் எதிரிகளை வீழ்த்தி வீர மரணம் அடைந்த போது ஒரு மனைவியாய் கண்கலங்கி நிற்காமல் மன உறுதியோடு தன் கணவருக்கு வீர வணக்கம் செலுத்திய கேப்டன் ராஜஸ்ரீயின் மன உறுதி இன்றைய பெண்களுக்கு வேண்டும் என்பது என் மனதில் ஆழப் பதிந்த விடயம்.
✍️ஆயுதமே இல்லாமல் எதிரிகளோடு சண்டையிட்டு வீர மரணத்தை தொட்ட துக்காராம் ஓம்பளேயின் வீரச்செயல் எல்லோராலும் படிக்கப்பட வேண்டிய ஒன்று. வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு எதிரிகளின் சித்திரவதைக்கு ஆளான போதிலும் ராணுவ ரகசியங்களை துளியளவும் சொல்லாமல் தன் தேசம் காத்து வீர மரணத்தை முத்தமிட்டவர் கேப்டன் சௌரவ் காலியா. மேஜர் பத்மபாணி ஆச்சார்யா, கேப்டன் அனுஜ் நய்யார், கர்னல் சந்தோஷ் பாபு மற்றும் ஹவில்தார் பழனி இவர்களின் தியாகச் செயல்களை வாசித்தபோது எங்கிருந்து இவர்களுக்கு அசைக்க முடியாத பற்று நாட்டின் மீது வந்தது? எப்போது இந்த நாட்டுப்பற்று எல்லோருக்குள்ளும் வந்திடும் என்ற கேள்வி என்னை துளைத்தது.
✍️தன் மகன் உயிரைக் காப்பாற்ற நினைக்காமல் பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய ராணுவத்தினர் அத்தனை பேரும் என் பிள்ளைகள் தான் என்ற ஃபீல்டு மார்ஷல் ஜெனரல் கரியப்பாவின் உயரிய எண்ணத்தை உலகம் உள்ளளவும் போற்றித் தானே ஆக வேண்டும்.
✍️இந்தியா - பாகிஸ்தான் என்ற வார்த்தையை கேள்விப்படும் போதே நம்முள் பதற்றம் வரும். பதற்றம் மட்டுமே நிறைந்த இந்தியா பாகிஸ்தான் மற்றும் இந்திய சீனா எல்லைகளில் நின்று இரவு பகல் பாராது, ஊர் உறக்கம் தொலைத்து , சொந்த சுக துக்கங்களை மறந்து எந்த நேரமும் ஆபத்தை உருவாக்கும் படைகளைத் தாக்கி நாட்டைக் காக்க தயாராக நிற்கும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களை உள்ளத்தின் உயரத்தில் வைத்து வணங்க வேண்டும். நம் தமிழகத்தின் தர்மபுரியைச் சேர்ந்த தீரன் சுரேஷ் எல்லை பாதுகாப்பு படையில் எதிரிகளை வீழ்த்தி தன் இன்னுயிரை தந்து நாட்டைக் காத்தார் என்று வாசித்த போது இந்தச் சகோதரரின் வீரத்தை எண்ணி பெருமை கொண்டேன். தன் கடைசி மூச்சு வரை நாட்டுக்காக போராடி உயிர் நீத்தவர் திரு.கன்வல்சித் சிங்.
✍️தன் நாட்டிற்காகவும் நாட்டு மக்களுக்காகவும் தினந்தோறும் எல்லையில் நின்று காவல் செய்யும் எல்லைச்சாமிகளை நம் குடும்பத்தில் ஒருவராக நினைத்து தினந்தோறும் இவர்களின் வீரச் செயல்களை வணங்குவோம். இந்த ராணுவ வீரர்களும், எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களும் நமக்காக இத்தனை பெரிய தியாகங்களை செய்யும்போது, இவர்களின் பாதுகாப்பில் மகிழ்வாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் நாட்டிற்குள் எந்தவித பேதமும் இன்றி இந்திய தாயின் பிள்ளைகளாய் சகோதர உணர்வோடும் சமத்துவ மனப்பான்மையோடும் மனிதாபிமானத்தோடும் அறம் சார்ந்த கலாச்சாரத்தை உருவாக்கி வாழ்வதுதான் நாம் இவர்களுக்கு செய்யும் சரியான மரியாதை என்பது நாட்டைக் காக்கும் நல்லுயிர்கள் என்ற புத்தகத்தை வாசித்து முடித்த போது நான் எனக்குள் பதித்துக்கொண்ட ஆழமான கருத்து.
வாசிப்போம் நாட்டைக் காக்கும் நல்லுயிர்கள் என்ற புத்தகத்தை
நேசிப்போம் நாட்டைக் காக்கும் நல்லுயிர்களை தினந்தோறும்!!
ஜெய்ஹிந்த்!! வாழ்க பாரதம்!!!
Comments
Post a Comment