மகளிர் தின வாழ்த்துகள்
வஞ்சியவள்வரமே!!!
🌺அழகில் தேவதையாய்
அன்பின் ஆரம்பமாய்
வீரத்தின் விதையாய்
தீரத்தின் திமிராய்
மழைச் சாரலாய்
சீறும் புயலாய்
கிழக்குச் சுடர் வானமாய்
புகழ்மிக்க திருத்தலாய்
இந்த வஞ்சியவள் வரமே!!!!
🌺ஒரு துளி உயிரணுவைப் பெற்று
உதிரத்தால் உருமாற்றி
உருவாக்கும் உயர் வித்தகி
ஈரைந்து மாதங்கள் கருவினில்
மிச்சகாலமெல்லாம்
மார்புக்கூட்டினுள் வைத்து
மகிழ்ந்திருக்கும் தவம்
இந்தவஞ்சியவள் வரமே!!!!
🌺அன்பெனும் வார்த்தைக்கு
அகராதி தந்து
அதீத சக்தியால்
அகிலம் ஆளும் அத்தியாயம்
வெயில் மழை பாராது
கல்லும் முள்ளும் கடந்து
துன்பங்களை தூசியாக்கும்
வல்லமை
இந்தவஞ்சியவள் வரமே!!!!
🌺வாடி நிற்பவர்களுக்கு
வாழ்க்கை விடியல்களை
பிரசவிக்கும்
சுடர் மிகு வைகறை வானம்
பொல்லார் கொடுமை
கண்டு பொங்குகையில்
புயலைக்கூட தோழனாக்கும்
பூமகள்
இந்தவஞ்சியவள் வரமே!!!!
🌺துணைகண்டு மனைகண்டு
மண்ணில் மகளிர் மாண்பு
காத்து நிற்கும் மாதவம்
உரிப்பதற்கும் எரிப்பதற்கும்
விறகல்ல
விதைகளை நல்விருட்சங்களாக்கும்
வியத்தகு விந்தை கற்றவள்
இந்தவஞ்சியவள் வரமே!!!!
🌺இடிகள் பலவும் தாங்கிய
இன்முகத்தாள்
ஞாலமெனும் ஆலயத்தில்
ஞான ஒளியாய்
மதம் பிடித்த மனிதனுக்கு
மறக்காமல் மனிதம்
கற்றுத் தரும் மாமேதை
இந்தவஞ்சியவள் வரமே!!!!
🌺விறகாய் சருகாய்
வெந்து தனியாமல்
வெற்றுத் தோட்டத்திலும்
வைரமணி கண்டெடுத்து
புலர்கின்ற விடியல்களை
பூபாள ராகம் இசைத்து
நடைதோறும் நம்பிக்கை
காற்றை விதைக்கும்
இந்தவஞ்சியவள் வரமே!!!!
🌺தன்னேரில்லா தகைமையாய்
தரணியில் தமிழ் போல்
தலைநிமிர்ந்து நிற்கும்
தங்கமகள்
இந்த வஞ்சியவள் வரமே!!!!
🌺வரமாய் வந்த மகளிருக்கு
மகளிர் தின வாழ்த்துகள் 💐💐💐
அருமை ! மகளிர் தின வாழ்த்துக்கள்!!@
ReplyDeleteஅருமை மா !!!மங்கையராக பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டுமம்மா💐💐💐💐
ReplyDelete❤️❤️❤️❤️
ReplyDeleteஅருமையான பதிவு.மகளிர் தின நல்வாழ்த்துக்கள் சகோ
ReplyDelete