கணினி உலகம்
🌍நவநாகரீகத்தின்
காவியத்தலைவனுக்கு
ஒரு நன்றி சமர்ப்பணமாய் ...
🌍அன்றொரு காலத்தில்
மேலைநாடுகளில் மட்டும்
சிங்காரமாய் வலம் வந்த
உனை எட்டிப் பிடிக்க
நினைத்த எங்களின்
கனவுகளுக்கு சிறகுகள்
தந்ததின் விளைவாய்
கனவு உருவம் நனவாகி
இன்று
பட்டி தொட்டியெல்லாம்
பவனி வருகின்றாய்
கம்பீர நடைபோட்டு
கணினி என்னும் பெயரில் ..
🌍இனம், மொழி தாண்டி
இதயங்கள் மட்டுமல்ல
கடல் கடந்து கண்டங்களும்
இணைந்து உலகமே
உம் ஒற்றைக் குடையின் கீழ்
இணைந்து நிற்பது
நீ தந்த இணையமெனும்
இணைப்பாலே !!
🌍முகம் தெரியாத உறவுகளுடன்
உள்ளத்து எண்ணங்களை
பக்குவமாய் பகிர்ந்திட
முகநூல் தந்தாய் !!
🌍பரந்து விரிந்த பாரவையும்
இன்று கணினியெனும்
உன் சிறு பெட்டிக்குள்
அடக்கி விட்டாயே !!
🌍நீ இன்றி ஏதுமில்லை
நீ இல்லாத துறையும்
எதுவுமில்லை
மருத்துவம் தொடங்கி
மளிகைக்கடை வரை
உன் ஆட்சியே !!
கோட்டை தொடங்கி
குக்கிராமம் வரை
ஆள்வதும் நீயே !!
🌍பல்துறைகளில் பயணித்து
வந்த நீயே இன்று - எம்
பள்ளி மாணவர்களின்
கையிலும் பாங்காய்
பாடம் சொல்லித் தருகிறாய் !!
🌍வன்பொருளோடு
மென்பொருள் சேர்த்து
விரைவாய் விந்தைகளும்
செய்து எங்களுக்கு
நேரச் சிக்கனம்
கற்றுத் தந்தாய் !!
🌍புதுப்புது செயலிகளால்
தினம் உனைப் புதுப்பித்து
புதுமையின் அறிவுத்
தேடலுக்குள் எங்களை
வழிநடத்துகிறாய் !!
🌍ஓராயிரம் கேள்விகளுக்கும்
ஒரு நொடியில் விடை தந்து
மனித மூளைக்குச் சவால் விட்டு
ஒட்டுமொத்த உலகையே
விரல் நுனியில் வைத்துள்ள
வியத்தகு விந்தையே !!
🌍விரல் கொண்டு
மெல்ல உனைத் தட்ட
பட்டென எல்லாமும்
கொட்டிச் செல்கிறாய்
வரிகளால் மட்டுமல்ல
வண்ண வண்ண
ஒளிக்காட்சிகளாகவும் !!
🌍வீதியில் சட்டை பிடித்து
இரயில் வண்டி ஓட்டிய
அரும்புகளின் கையில்
நீ விளையாடுவது
விசித்திரம் என்பதால் அல்ல
விரும்பிய நண்பன் என்பதால் !!
🌍உள்ளங்கையில் உலகம் தந்து
அறிவை விசாலப்படுத்தி
அண்டம் அளந்திடவும்
ஆழியின் ஆதியும் கணித்து
விண்ணாட்டில் வீரநடை போடவும்
வித்திட்டாய் விந்தையாய் !!
🌍உன்னிடம் இல்லாத
தகவலும் இல்லை
நீ இல்லாத நிலையும்
இனியொரு போதும் இல்லை !!
🌍சுவாசமென உயிருக்குள்
கலந்துவிட்ட உன்னிடம்
நாணயத்தின் இரு பக்கமென
நன்மை தீமைகள்
நிறைந்த போதிலும்
தீமைகளைப் புறந்தள்ளி
நன்மையின் பாதையில்
நாளும் பயணமதை தொடர்ந்து தினமும் உமைப்போல்
அறிவுத் தேடல்களைப்
புதுப்பித்துக் கொள்ள
வளர்ச்சியின் வழியில்
அழைத்துச் செல்லும்
காவியத்தலைவனான
கணினிக்கு நன்றிகள்
🌍காலம் தந்த கணினியின்
வளர்ச்சிப் பாதையில்
கணினி தந்த பாடமதில்
ஆக்கத்தின் வழியில்
மனிதனெனும் மாசக்தி.........
Comments
Post a Comment