நம்மாழ்வாரின் நற்சிந்தனை
இயற்கையை நேசித்து, இயற்கையை சுவாசித்து, இயற்கையின் இன்பத்தில் திளைத்து , ஈரைந்து மாதங்கள் மட்டுமே அன்னையின் கரு வாழ்நாளின் மிச்ச காலமெல்லாம் இயற்கை அன்னையின் மடி என்பதை அனுபவித்து, நிலையில்லா உலகில் நிஜம் இல்லாப் பொழுதுகளில் நான் நிற்பதும் நடப்பதும் இயற்கை கருணை மட்டுமே என்று உணர்ந்து, எல்லாமும் இயற்கைதான் என்று வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து உலகிற்கு உணர்த்திட காவிரியின் மடியில் பிறந்து, காவிரி நதியில் விளையாடி, காவிரிப்படுகையில் காலம் கழித்து, இறுதியில் காவிரித் தாயின் மடியிலே தன் உயிரையும் துறந்த இயற்கை போராளி. வாழ்நாளின் மொத்த காலத்தையும் இயற்கை விவசாயத்தை மேம்படுத்தவும், மரபுசார் வாழ்வியலை பாதுகாக்கவும், மீட்டெடுக்கவும் தஞ்சை மண்ணில் திருக்காட்டுப்பள்ளி என்னும் இடத்தில் இளங்காடு எனும் சிற்றூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து, தஞ்சை மண்ணின் மைந்தனாய் தமிழகத்தின் மண்ணையும் மகத்துவத்தையும் காத்து இன்று மரபின் தந்தை என எல்லோராலும் போற்றப்படும் பெரும் மதிப்பிற்குரியவர் நம் நெஞ்சத்தில் நிறைந்தவர் நம்மாழ்வார் என்னும் பேராண்மை. விவசாயத்தின் மீது ஆர்வமும் தீவிர ஈடுபாடும் கொண்ட இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மையில் இளங்கலை பட்டம் பெற்று , கோவில்பட்டி மண்டல மழைப் பயிர் ஆய்வகத்தில் 1960ஆம் ஆண்டு ஆய்வு உதவியாளராக பணியில் சேர்ந்தாலும் ஆய்வகங்களில் நிலவும் களப்பணியில் ஈடுபடாது செய்யப்படும் பயனில்லா பணிகளுக்கு எதிராக குரல் கொடுத்து மூன்றே ஆண்டுகளில் அப்பணியை துறந்தார். மண்டல விவசாய நிலையத்தில் வேலை செய்தபோது ஜப்பானிய சிந்தனையாளர் மற்றும் விவசாயி மாசனோபு ஃபுக்குவோக்காவால் ஈர்க்கப்பட்டு தன் மொத்த வாழ்வையும் இயற்கையின் பக்கம் திருப்பி விட்ட இயற்கைவாதி இவர். இயற்கை விவசாயத்தை, காவிரிப் படுகையை காப்பதற்காக கடைசி மூச்சுவரை பாடுபட்ட இவர் காவிரிப் பாசனமே தமிழக மக்களின் சோற்றுக்கு ஆதாரம் என்பதால் காவிரி பிரச்சனையை தஞ்சையின் பிரச்சனையாக மட்டுமல்ல ஒட்டுமொத்தத் தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சனை என பாமர மக்களும் புரிந்து கொள்ள பட்டி தொட்டியெல்லாம் சென்று பறைசாற்றிய பகுத்தறிவாளன் இவர். அடி காட்டுக்கு நடு மாட்டுக்கு நுனி வீட்டுக்கு என்ற இவரின் வரிகளில்தான் எத்தனை ஆழமும் அர்த்தமும். மரம், செடி , கொடியின் வேர் மண் செழிக்கவும், நடுப்பகுதி மாட்டிற்கு தீவனமாகவும், நுனியில் விளையும் பழங்களும் பயிர்களும் மனிதனுக்கு என்பது இவரின் நயமான கருத்து. இயற்கை விவசாயத்தில் தன் புதிய பயணத்தைத் துவங்கிய நம்மாழ்வார் இயற்கை விவசாயத்தின் கூறுகளை கற்றுக்கொண்டது பாண்டிச்சேரி ஆரோவில் இருந்த பெர்னாட்டிடம் தான். கால் நடைப்பயணமாக கடைக்கோடி கிராமங்களுக்கும் சென்று செயற்கை உர பயன்பாட்டின் தீமையை எடுத்து இயம்பியதோடு இயற்கை உரத்தின் அவசியத்தையும் அத்தியாவசியத்தையும் அதை தயாரிக்கும் முறையையும் கற்றுத்தந்தார். இன்று இயற்கை விவசாயத்தின் அருமையும் பெருமையும் ஓரளவு நமக்கு புரிந்திருக்கிறது என்றால் அது நம்மாழ்வாரின் முயற்சி மட்டுமே காரணம். கலப்பின விதைகளை ரசாயன உரங்களின் அரசியலுக்கான அடிப்படை என்பதை அறிந்து அதை முற்றிலுமாக எதிர்த்தவர். நீர் , விதை, நேரம் அனைத்தையும் குறைத்து அதிக மகசூல் தரும் ஒற்றை நாற்று நெல் விதையை இந்த உலகத்திற்கு அறிமுகம் செய்தவர்கள் தமிழர்கள்தான் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்த தமிழகத்தின் பெருமை நம்மாழ்வார். கலப்பின விதைகளை எதிர்த்ததோடு பாரம்பரிய விதையின் மகத்துவமும் முக்கியத்துவமும் விவசாயிகளின் மனதில் பதிந்திட இவர் பட்டபாடு சொல்லில் வடிக்க முடியாதது. பாரம்பரிய நெல் விதைகளை பன்னாட்டு நிறுவனத்திடம் அரசு விற்ற போது இவரது கண்களில் கண்ணீர் மட்டுமல்ல நெஞ்சத்தில் இரத்தமும் சொட்டியது. விதைகளின் அவசியத்தை படித்தவரும் பாமரரும் உணர்ந்துகொள்ள தன் எழுத்துக்களையும் பயன்படுத்தி இனி விதைகளே பேராயுதம் என்னும் நூலையும் வடித்தார். வரும் தலைமுறையினரும் இயற்கை விவசாயத்தின் அருமை உணர்ந்திட இவர் படைத்த நூல்கள் வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும், தாய் மண் , உழவுக்கும் வரலாறு உண்டு , பூமித்தாயே தாய் மண்ணே வணக்கம் , மரபை அழிக்கும் மரபணு மாற்று விதைகள், நெல்லை காப்போம், மற்றும் களையெடு என்பன. எங்கள் மண்ணில் விதையும் நெல்லிக்கனியின் சத்து பலநூறு கொடுத்து வாங்கும் ஆப்பிளின் சந்தை விட அதிகம் என்று ஆணித்தரமாக உணர்த்தியவர் நம்மாழ்வார். ஜே.சி. குமரப்பா கூறிய டிராக்டர் நல்லாத்தான் உழும் ஆனால் சாணி போடாதே என்ற கருத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்த இவர் ஏர் பூட்டி உழும் பரிய உழவையும் மண்ணின் வளத்தையும் மேம்படுத்த சொன்னார். மேற்குத் தொடர்ச்சி மலையின் சோலைக்காடுகள் அழிவதை தடுக்க கடைசிவரை போராடி சோலைக்காடு இல்லையென்றால் சோறும் இல்லையே என மக்களின் மனதில் பதித்தவர். 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட நிலங்களை சரி செய்ய பல ஆண்டுகள் ஆகும் என வல்லுனர்கள் கூறவே விரைவில் சரி செய்ய என்னால் முடியும் என்று களம் சென்று சாதித்துக் காட்டிய சரித்திரம் இவருடையது. ஏன் இயற்கை விவசாயத்தைக் காக்க வைரஸோடு கூட போட்டி போட்டு இவரால் ஜெயிக்க முடிந்தது. ஆம் பூச்சிக்கொல்லி மருந்தை தவிர்ப்பதற்காக இவர் தயாரித்த இஞ்சி பூண்டு கரைசல் கொண்டு வைரஸையும் விரட்டியடித்தனர் நம் விவசாயிகள். தமிழகம் தாண்டி கடல் கடந்து இந்தோனேசியாவிலம் சுனாமி பாதித்த நிலங்களை மீட்டெடுக்க முப்பது பண்ணைகளை உருவாக்கிய பரந்து பட்ட மனதுக்குச் சொந்தக்காரர் இவர். மண்ணுக்கும் மனிதனுக்கும் தீங்கு விளைவிக்கும் நவீனத்தை எதிர்த்தாரே தவிர நவீனமே வேண்டாமென்று சொல்ல வில்லை இவர். கிராமம் கிராமமாக சென்று விவசாயிகளிடம் பாரம்பரிய பழங்களையே விதைக்கவும் வாங்கவும் சொன்னவர். நம் தமிழகத்தின் சொத்தான பாரம்பரியமான வேப்பிலைக்கு அமெரிக்கா காப்புரிமை பெற்றதை எதிர்த்து ஜெர்மன் நீதிமன்றத்தில் வாதித்து நமது பாரம்பரியத்தோடு வேப்பிலைக்கான காப்புரிமையையும் மீட்டு வந்த இவரின் தாய் பற்றையும் தாய்மண் மீது இவர் கொண்ட நேசத்தையும் என்னவென்று சொல்வது. இயற்கை உரம், விவசாயம் இவற்றைக் காக்க கானகம் , குடும்பம் மற்றும் லிசா உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்புகளை உருவாக்கினார். இன்றளவும் இவர் உருவாக்கிய கானகம் வளர்ச்சியின் பாதையில். 2007 காந்திகிராம பல்கலைக்கழகம் இவருக்கு அறிவியலில் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி இவரைக் கௌரவித்தது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் சுற்றுப்புற சுடரொளி பட்டம் தந்தது சுற்றுச்சூழல் ஆர்வத்திற்கு கிடைத்த கௌரவமும் கூட. தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டத்தில் விளைநிலங்களுக்கு கீழ் மீத்தேன் எடுக்க மத்திய அரசு திட்டமிட்டது. இத்திட்டம் மக்களையும் மண்ணையும் பாதிக்கும் என உணர்ந்த இவர் இத்திட்டத்தை எதிர்த்தார். மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் பட்டுக்கோட்டை அருகில் பில்லிக் காடு கிராமத்தில் போராட்டத்தின்போது , தான் நேசித்து சுவாசித்த இயற்கையின் மடியிலே தன் உயிரையும் இணைத்துக் கொண்டார். இயற்கையும் விவசாயமும் மண்ணும் மட்டுமே எல்லாமும் என வாழ்ந்த நம்மாழ்வாரின் சாதனைகளும் போதனைகளும் எண்ணிலடங்கா. இயற்கை செழித்தால் பூமி செழிக்கும் ; பூமி செழித்தால் விவசாயம் செழிக்கும்; விவசாயம் செழித்தால் நம் வாழ்வு செழிக்கும் என்பதற்கு ஆகச் சிறந்த எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர் நம்மாழ்வார். என்றோ ஒரு நாள் போகிற போக்கில் இயற்கையை நினைக்காமல் அனுதினமும் இயற்கையின் மகத்துவத்தை நினைத்திடுவோம். நாம் உறவுகளோடு உள்ளம் மகிழ சுவாசம் தந்தது இந்த இயற்கை ; அடுக்கு மாடிகளில் ஆடம்பரமாய் வாழ்ந்திட ஆயுள் தந்தது இந்த இயற்கை. நவீனமாகிப்போன நாகரிகத்தால், நெகிழியின் ஆதிக்கத்தால் ஏற்படும் இயற்கை அழிவை தடுப்போம். பணமே எல்லாமுமாகிப்போன கலிகாலத்தில் இறுதியில் அடங்கப்போவது என்னவோ இந்த இயற்கை அன்னையின் ஆறடி மடிதான் என்பதை உணர்ந்து , மரங்களால் இயற்கையை இன்னும் இன்னும் அலங்கரித்து, மாசில்லா பூமி காத்து, இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்ந்திட இயற்கையை நேசிப்போம்; சுவாசிப்போம்.
Comments
Post a Comment